மூலநோய்
ஆசனவாயில் உள்ள அசுத்த ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுவதால், ஆசனவாயில் நமைச்சல், எரிச்சல் போன்ற குறிகுணங்கள் ஏற்படும். பின்பு தொடர்ச்சியான மலச்சிக்கலினால், மலம் வறண்டு ஆசனவாய் ரத்தக் குழாய்களைக் கீறி ரத்தக் கசிவை ஏற்படுத்தும். வலி எதுவும் இருக்காது. இது ஆரம்ப நிலை.
அடுத்த நிலையில், தொடர்ச்சியான மலச்சிக்கலினால் மலத்தைச் சிரமம் கொண்டு முக்கி வெளியேற்றுவதால், ஆசனவாய் வழியே முளை சுருங்கி தானாக உட்சென்றுவிடும். முற்றிய இது இரண்டாவது நிலை. முற்றிய நிலையில் வெளிவந்த முளையைத் தானாகச் உட்செல்லாமல், நாமாக உட்தள்ள வேண்டி இருக்கும். நாட்பட்டு விட்டால், முளை உட்தள்ள இயலாமல் வெளியிலேயே இருக்கும். இத்தகைய இயல்புகளை உடைய நோயைத்தான் மூலம் என்கிறோம்.
மூலநோய் வருவதற்கான காரணங்கள்
நாம் உண்ணும் உணவு, செயல்களினால் இயல்பிலிருந்து மாறுபட்ட வாதநாடியும் பித்த நாடியும் மூலம் வருவதற்குக் காரணமாய் அமைந்து விடுகின்றன.
உணவினால் வரும் மூலம்
- "மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்" என்பது சித்தர் வாக்கு. அதாவது, கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கு மட்டுமே உண்ணத் தகுந்தது. உடலுக்கு ஏற்றது என்பது இதன் பொருள். எனவே, பிற கிழங்கு வகைகளை அதிகமாக உண்கையில், அவை வாயுப்பெருக்கத்தை ஏற்படுத்தி வாத நாடியைப் பாதிக்கும்.
- மிகுதியான காரம் நிறைந்த உணவுகளை எடுத்தாலும், பொறித்த எண்ணெய்ப் பலகாரங்களை அளவுகடந்து உண்பதாலும், உடற்சூடு பாதிக்கப்பட்டு பித்தநாடி பாதிப்படையும்.
செயலினால் ஏற்படும் மூலம்
- தொடர்ந்து உட்கார்ந்து பார்க்கும் பணியினால் உடற்சூடு மிகுந்து பித்தநாடி பாதிப்படையும்.
- மூச்சுப் பயிற்சி, தியானம் இவற்றை முறைப்படி கற்காமல் தாமாக செய்யும்போது ஏற்படும் தவறினால் பித்தநாடி பாதிப்படையும்.
கருணைக்கிழங்கு
மூல நோயில் கருணை காட்டுவதில் கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும். ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக ஏற்று நா வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும் என்று அனுபவமுள்ளவர்கள் கூறுவதுண்டு.
கருணைக் கிழங்கு லேகியம்
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது.
மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க, இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது.