அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்களுக்கான சில வாழ்க்கைமுறை மாற்றங்கள்!
இன்றைய காலகட்டத்தில் பத்தில் எட்டு பேர் அசிடிட்டி மற்றும் நெஞ்சுஎரிச்சல் பிரச்சனையை சந்திக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் தான். மேலும் தொடர்ச்சியாக காரமான உணவுகளை உட்கொண்டு வருவதும்தான். இந்த பிரச்சனையை சரிசெய்ய ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு வருகிறோம். ஆனால் இப்படியே எப்போதும் மாத்திரைகளை எடுத்து வந்தால், நிறைய பக்க விளைவுகளை சந்திக்கக்கூடூம். எனவே அசிடிட்டி மற்றும் நெஞ்சு எரிச்சல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் ஆசிட், அசிடிட்டி மற்றும் நெஞ்சு எரிச்சலை மேலும் அதிகரிக்கும். ஆகவே ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தவிர்க்கலாம்.
ஜங்க் உணவுகள்
ஜங்க் உணவுகள், காரமான உணவுகள் மற்றும் பிட்சா, பர்கர், சமோசா போன்ற உணவு பொருட்களை சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் சாக்லேட், கேக் போன்றவற்றையும் அதிக அளவில் சாப்பிட கூடாது. ஏனெனில் இவையும் அசிடிட்டியை ஏற்படுத்தும்.
அதிக உணவு
ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் நெஞ்சு எரிச்சலை மற்றும் அசிடிட்டியை ஏற்படுத்தும். ஏன் எனில் செரிமான மண்டலம் அதிக உணவுகளை செரிக்க முடியாமல் அமில தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே அளவாக போதிய இடைவேளை விட்டு சாப்பிட வேண்டும்.
சாப்பிட்டவுடன் தூங்குவது
சிலர் உணவை உட்கொண்டவுடனே தூங்குவார்கள். இப்படி தூங்கினால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, அசிடிட்டி ஏற்பட கூடும்.
உடல் பருமன்
உடல் எடை அதிகமாக இருந்தாலும் அசிடிட்டி வரும் வாய்ப்பு அதிகம். எனவே கண்ட உணவுகளை உட்கொண்டு உடல் எடையை அதிகரிக்க வேண்டாம்.
காபைன் பானங்கள்
காபி, டீ, கோலா போன்றவற்றை அசிடிட்டி இருக்கும் போது தவிர்க்கவேண்டும். ஏனெனில் இவையெல்லாம் அசிடிட்டியை ஏற்படுத்தும். எனவே அதிக அளவில் எடுத்து கொள்வதை தவிர்க்கவும்.
ஆல்கஹால்
ஆல்கஹால் அசிடிட்டியை அதிகபடுத்தும். எனவே ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்தவும்.
புகை பிடித்தல்
சிகரெட்டில் உள்ள நிக்கோடின் வயற்றில் உள்ள படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த எரிச்சல் அப்படியே அமில உற்பத்தியை அதிகபடுத்தும். எனவே புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.
தவறான நிலையில் உறங்குதல்
தவறான நிலையில் உறங்குதல் அசிடிட்டி ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணம். நேராக படுப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சனையால் தொடர்ந்து ஏற்படும் நெஞ்சுஎரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
சிறந்த தீர்வு
"தண்ணீரே மிக சிறந்த தீர்வாகும்." உடலில் நீர் சத்து குறைவாக இருந்தால் அமிலத்தின் அளவு அதிகரித்து, அதனால் நெஞ்சுஎரிச்சல் ஏற்படுகிறது. எனவே தண்ணீர் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.
தகவல் உதவி : ரோஹினி ஹெர்பல்ஸ்